Be Wealthy
போதுமான தனிப்பட்ட செல்வம்
சுதந்திரம் என்பது ஆன்மாவின் ஆக்ஸிஜன் (பிராண வாயு) என்கின்றார் மோஷே
தயான் (Moshe Dayan). நிதி சுதந்திரம் பிற எல்லா சுதந்திரம் அதாவது கால சுதந்திரம் (Time
Freedom), ஆரோக்கிய சுதந்திரம் (Health Freedom), உணர்வு சுதந்திரம் (Emotional Freedom), என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளது. நிதி சுதந்திரத்திற்கு நிறைய
வரையறைகளும் விளக்கங்களும் இருந்தாலும். அதை நான்கு வரிகளில் தெளிவுபடுத்தலாம்.
1. போதுமான தனிப்பட்ட செல்வம்
2. வாழ்க்கையை கொண்டாடும் மனோநிலை
3. தீவிரமான வேலையை சாராதிருத்தல்
4. போதுமான வருமானம்
இவற்றைக் கொண்டுள்ள ஒருவரை நிதி சுதந்திரம்
அடைந்தவர் என்று அழைக்கலாம். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
போதுமான தனிப்பட்ட செல்வம்
‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்’ என்று பாரதியை போல் வறுமையிலும் பாடும் நெஞ்சுரம் நம்மில் எத்தனைப்
பேருக்கு உண்டு?. இயல்பை மீறி எண்ணங்களை ஓட செய்வது நல்லதுதான். என்றாலும் அந்த
எண்ணம் நம்மை நாமே ஏமாற்றுவதாக இருந்துவிடக் கூடாது. வறுமையை “ஒழிக்க வேண்டும். "கொடிது கொடிது வறுமை கொடிது” என்பார் ஒளவைப்பாட்டி. வறுமை வந்தால் அழகு, செல்வம், நல்ல மனம், குணம், பெருமை என எல்லாம் கேடும் என்கின்றார்
அருணகிரி நாதர்.
வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா
அடி அந்தம்இலா அயில்வேல் அரசே
மிடி என்றுஒரு பாவி வெளிப்படினே
பொருளைத் தேடி சேர்ப்பதே நல்லது. அதுவும் செல்வத்தை நிரம்ப ஈட்டுக
பகைவரின் வீராப்பை அறுத்து ஒழிக்கும் எஃகு அதனைப் போல் கூர்மையானது வேறெதுவும்
இல்லை என்று வள்ளுவர் பெரும்தகை குறிப்பிடுகின்றார்.
“செய்க பொருளைச் செறுநர்
செருக்குஅறுக்கும்
எஃகுஅதனிற் கூரியது இல்”
செல்வம் உட்பகையான ஏழ்மை, பொறாமை, வஞ்சம் என எல்லா பகைக்கும் எதிரானது. இப்பகைகள் நமது எண்ணங்களை
முதலில் பாதிக்கின்றன பிறகு வாழ்க்கையையும் பாதிக்கின்றன. உலகில் தனிப்பட்ட செல்வநிலையைக்
கொண்டு மக்களின் வாழ்க்கை முறையை நான்காக பிரிக்கலாம். 1.
போராட்டம் 2. பிழைப்பு 3. வாழ்தல் 4. கொண்டாடுதல்
1.போராட்டமான வாழ்க்கை
‘வாழ்க்கையே ஓர் போர்களம் வாழ்ந்துதான் பார்க்கனும்’ என்ற வாக்கியம் இவர்களுடையதுதான். வாழ்க்கை
என்பது போராட்டமில்லை. அந்த எண்ணத்தை கைவிடுங்கள். இவர்களில் சிலரை தவிர பிறர்
எல்லாரும் தங்கள் வாழ்க்கையை தாங்களே நரகமாக்கிக் கொள்கின்றனர். இவர்களின் இந்த
நிலைக்கு காரணம் இவர்களின் எண்ணமும் செயலும்தான். அடிப்படை நிதி கல்வி அறிவு இல்லாதவர்கள் வரவுக்கு அதிகமாக செலவு செய்பவர்கள்.
கடனில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை தானே அழித்து கொள்பவர்கள்
இதில் அடங்கும்.
பலரின் வாழ்க்கை வெறும் கடனிலேயே முடிந்துவிடுகின்றது சிலருக்கு வாழ்க்கையே கடனால்
முடிந்துவிடுகின்றது. உங்கள் வாழ்க்கை போராட்டமாக இருந்தால் அதற்கு காரணம்
நீங்கள்தான் வேறு ஒருவரும் இல்லை. இதை மாற்றமுடியும், "உங்கள் எண்ணம் மற்றும் செயல்களை மாற்றுங்கள் வாழ்க்கை மாறிவிடும்" என்கின்றார் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஐயா.
2. பிழைப்பு
தங்களை தாங்களே முடக்கிக்கொள்ளும் இவர்கள் பாதுகாப்பு என்ற பெயரில்
தன் வாழ்க்கையில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வாழும் ஓர் இயந்திரத்தனமான வாழ்க்கை.
இவர்களில் பலர் போராடும் வாழ்க்கையின் விளிம்பில்தான் உள்ளனர். ஒருசிறு நிகழ்வு
இவர்களை போராட்டத்திற்குள் தள்ளிவிடலாம்.
அறியாமையால் இவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பு உணர்வு இவர்களை
வாழவிடுவதும் இல்லை. மேலும் சிலர் முக்கியமான சில முடிவுகளை எடுக்காமல்
தள்ளிப்போடுவதும், நமக்கு வாய்த்தது இவ்வளவு தான் என்றும்
இருந்து விடுகின்றனர். இவர்களுக்கு அரிஸ்டாட்டில் கூறும் அறிவுரை “விவேகம் என்பது பாதுகாப்பான இன்பமல்ல மாறாக வலிகளை தவிர்ப்பது”.
3. வாழ்தல்
வாழ்தல் என்பது வேறு, உயிரோடு இருத்தல் என்பது வேறு, வாழ்தல் என்பதை தன்னிறைவு பெற்றிருத்தல் என்றும் கூறலாம். தன்னிறைவு
என்பது பொருளாதாரம், ஆரோக்கியம், உணர்வு, சமூகம், கல்வி என எல்லாவற்றிலும் தன்னிறைவை பெற்றிருத்தல். ஆனால் மக்களிடையே
பற்றாக்குறையும், பற்றாக்குறை
உணர்வும்தான் உள்ளது. ஒரு சிலரே வாழ்க்கையை வாழ்கின்றனர் எனலாம். இவர்களையும்
அறுபது வயதில்தான் பார்க்க முடிகின்றது. அறுபது வயதில் உள்ளவர் ‘வாழ்கின்றோம்’
என்று கூறி என்ன பயன் குறைந்தது நாற்பது வயதுள்ளவர் அல்லவா
சொல்ல வேண்டும்.
வாழ்க்கை என்பது தினம் தினம் புது புது அனுபவமாக இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு பலரின் வாழ்க்கை ஒரு சின்ன அறைக்குள்ளாகவே முடங்கி விடுகின்றது.
பொருளாதார தன்னிறைவுக்கே நாம் வாழ்நாள் முழுவதும் செலவிடுகின்றோம். தனக்கும் தனது
மகிழ்ச்கியான வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று தெரியாமல் மக்கள் பணத்தை
விரட்டிக்கொண்டுதான் உள்ளனர். “வாழ்க்கை என்பது இதைத்தவிர வேறு என்ன?” என்று தனது தற்போதைய நிலைதான் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறும்
மனிதர்கள் பலர். இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையே இவர்களை
கஷ்டப்படுத்துகின்றது என்று அறியாத இவர்களுக்கு ஜேம்ஸ் ஆலன் (James Allen) அவர்களின் அறிவுரை “உங்கள் வாழ்க்கையை குறித்து நீங்கள் எந்த மாதிரியான எண்ணங்களையும்
மற்றும் நம்பிக்கைகளையும் கொண்டுள்ளீர்களோ அதுபோலதான் உங்கள் வாழ்க்கை அமையும்”.
வாழ்க்கையைப் பற்றியும் அதன் உன்னதத்தைப் பற்றியும் ஆன்மீகம்
பேசினாலும் அவை எல்லாம் பணத்திற்கு எதிரானவை. இதை ஆச்சாரியார் ரஜ்னீஷ் (Rajneesh) “இந்த மதங்கள்
எல்லாம் சொர்க்கத்தைப் பற்றி பேசிக்கொண்டு வாழ்க்கையை நரகமாக்குகின்றன. அதனால்
இந்த வாழ்க்கையை வாழதேவைப்படும் பணத்தை இவை எதிர்க்கின்றன”
என்றார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை
சம்பாதித்துக்கொண்டு வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் வாழ்க்கை ஓர் உயர் நல் மனித (High
Well Being) வாழ்வாக அமையட்டும்.
4. கொண்டாட்டம்
இது முழுக்க முழுக்க மனம் சார்ந்ததே! பணம் இருந்தாலும் இல்லை
என்றாலும் வாழ்க்கையைக் கொண்டாடும் மனம் வேண்டும். ஆனால் பணம் இல்லாமல்
கொண்டாடுவதற்கும் பணத்தைக் கொண்டு கொண்டாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. “கொண்டாட்டம் என்பது ஏன் பணத்தோடு
இருக்க கூடாது?” என்று
கேட்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki). “வாழ்க்கை என்பது கொண்டாட்டமாகத்தான்
இருக்க வேண்டும்” என்கின்றார் ஓஷோ
(Osho). இதனை தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா “வாழ்க்கை என்பது உயிரோடு இருப்பதற்கு
இல்லை, பிழைப்பதற்கு இல்லை, வாழ்வதற்கும் இல்லை, வாழ்க்கை என்பது கொண்டாடுவதற்கே” என்றார். வாழ்க்கையை கொண்டாடும் வழிகளை
தேடுங்கள். நான் தேடிக் கண்டுக்கொண்ட ஒரு
வழிதான் நிதி சுதந்திரம்…(தொடரும்).
No comments:
Post a Comment