Financial Freedom (Financial Well-being)
நிதி சுதந்திரம் இப்போது நீங்கள் ஈடுபட்டுள்ள வேலை அல்லது தொழிலை விட்டுவிட்டு இப்போது வாழ்வதுபோல் வாழ்நாள் முழுவதும் உங்களால் வாழமுடியுமானால் நீங்கள்தான் பணக்காரன்” என்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki) நிதி சுதந்திரமான வாழ்க்கையை ஒரு பணக்கார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு பணக்காரன் என்பது ஹென்றி ஜேம்ஸ் (Henry James) குறிப்பிடும் பணக்காரன் அதாவது “தங்கள் கற்ப்பனை செய்த வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்தையும் பெற்றிருப்பவர்” என்று அர்த்தம்.
உங்கள் வாழ்க்கையை முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு நீங்கள்
இந்தியாவின் முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராக வேண்டிய அவசியமில்லை. ஏன்!
உள்ளுரிலும் ஒரு பெரும் பணக்காரனாக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு
தீவிரமான வேலை அல்லது தொழிலைச் சார்ந்து இல்லாமல் உங்கள் செலவுக்கு அதிகமான வருமான வாய்ப்பை பெற்றிருந்தால், அது போதும் அதுதான் நிதி சுதந்திரமாகும். உதாரணமாக உங்கள் ஆண்டுச் செலவு மூன்று இலட்சம்
என்று வைத்துக்கொள்வோம். மூன்று இலட்சம் தாண்டி வருமானம் தரக்கூடிய சொத்துகள் (Assets) அல்லது செயலற்ற வருமானம் (Passive Income)) உங்களிடம் இருந்து தீவிரமான வேலை அதாவது உங்களுக்கு விருப்பமில்லாத அல்லது உங்கள்
நேரத்தையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் வேலையில்
நீங்கள் ஈடுபடாமல் இருந்தால் அதுதான் நிதி சுதந்திரம்.
இந்த கதையை கேளுங்கள் ராமுவும் சோமுவும் நண்பர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள ஓர் சிறிய கிராமத்தில் வாழ்ந்தனர்.
மிகவும் உழைப்பாளிகளான அவ்விரு இளைஞர்களுக்கும் வாழ்க்கையைப் பற்றி நிறைய கனவுகள்
இருந்தன (அப்படி வாழ வேண்டும்! இப்படி வாழ வேண்டும்! என்று நம்மைப் போலதான்). அந்த
கிராமத்து மக்களுக்கு தேவையான குடிநீர் மலையின் உச்சியில் உள்ள ஒரு ஊற்றை சார்ந்து இருந்தது. தினமும்
மக்களுக்கு தேவையான குடிநீரை எடுத்து வருவது அந்த இரு நண்பர்களின் வேலை.
ஒவ்வொருவரும் தலா 500 லிட்டர் வீதம் எடுத்து வந்து லிட்டர் 50 பைசா வீதம் விற்று பணம் ஈட்டிவந்தனர்.
கனவுகளை நிறைய சுமந்துக் கொண்டிருந்ததால், நாட்கள் செல்ல செல்ல ராமுவுக்கும் சோமுவுக்கும் சோர்வு ஏற்பட்டது.
நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்தப் பணம் அன்றாட செலவுகளுக்கே சரியாக இருந்தது.
இருவருக்குமே தங்கள் செயல்பாட்டில் மாற்றம் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
உடனே ராமு அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்துக்கொண்டான். தினமும் 700 லிட்டர் தண்ணீரை எடுத்து வந்து
மக்களிடம் கொடுத்துப் பணம் பெற்றான். மக்கள் ராமுவின் உழைப்பை பாராட்டினார்கள்
அவனுக்கு அது மகிழ்ச்சியை கொடுக்கவே அவன் தொடர்ந்து செய்தான். ஆனால் சோமு சற்று
வித்தியாசமாக சிந்தனைச் செய்தான் மலையிலிருந்து கிராமத்திற்கு ஒரு குழாய் வழியாக நீரை கொண்டுவருவது
தான் அவனுடைய திட்டம். சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் சேமித்து அதற்கான பொருள்களை
வாங்கினான் பிறகு நாளொன்றுக்கு 500 லிட்டருக்கு பதில் 300 லிட்டர் தண்ணீரை மட்டுமே
எடுத்துவந்தான். தண்ணீர் எடுத்துவந்த நேரம் போக மீதமுள்ள நேரத்தை எல்லாம் குழாய்
அமைப்பதில் செலவிட்டான்.
ராமுவுக்கு இணையாக சோமு உழைத்த போதும் ஊர் மக்கள் சோமுவைப் பார்த்து
நகைத்தனர். பிறகு அவனுக்கு புத்திமதியும் சொல்ல ஆரம்பித்தனர் “ராமுவைப்பார் நன்றாக உழைக்கின்றான் அதுபோல் நீயும் செய்தால் என்ன?, இளமை இருக்கும் போதே நிறைய பணம்
சம்பாதிக்கும் வழியைப்பார், நீ செய்வது வீண் வேலை, சொல்வதை கேள்.” என்று ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு சொல்லிக் கொண்டே சென்றனர். சோமு
இதையெல்லாம் காதில் வாங்குவதாகவுமில்லை, தன் நோக்கத்தை மாற்றுவதாகவுமில்லை. நாட்கள் வேகமாக நகர்ந்தது ராமு அதிகமாக தண்ணீர் எடுத்துவந்து
சம்பாதித்த பணத்தை சேமித்தான் பிறகு சேமித்த பணத்தைக் கொண்டு சில பொருள்களை வாங்கினான். ஆனால்
சோமுவின் வேலை வெகுவாக முடிவுற்றது. இப்போது அந்த கிராமத்திற்கு தேவையான நீரை சில
நிமிடங்களில் சுலபமாக எடுத்துவந்தான் சோமு. மக்கள் எல்லோரும் இப்போது சோமுவை
பாராட்டினர்.
சோமு தன் கனவு
வாழ்க்கையை வாழ தொடங்கினான். ராமு இப்போது சோமுவிடம் வேலை செய்கின்றான். ராமுவின்
மகன் ராமுவிடம் ‘ஏன் அப்பா
நீங்கள் சோமு மாமா போல் இல்லை?’ என்று கேட்டான். நீங்கள்
சொல்லுங்கள் அதற்கான பதிலை!!. இந்த கதையில் வரும் இருவருமே உழைப்பாளிகள்தான்.
ஆனால் சோமு புத்திசாலியான உழைப்பாளி. நோக்கம் இல்லாத ராமுவின் உழைப்பு பயனற்றுப்
போனது. “தவறான பாதையில் நீங்கள் எவ்வளவு வேகமாக
ஒடினாலும் பயனில்லை” என்பார்கள். இங்கு கடின உழைப்பு மட்டும் போதாது புத்திசாலிதனமும்
வேண்டும்.
செயலற்ற வருமானத்திற்கும் நிதி சுதந்திரத்திற்காகவும் சொல்லப்படும் இக்கதையில் வரும் ராமுவைப்
போல் இங்கு பலரை நாம் பார்க்;கின்றோம். அதுவும் திறமையாகவும் கடினமாகவும் உழைக்கும் மக்கள் நிறைய பேர் இங்கு உண்டு. அதேபோல்
சோமுவைப் போன்றவர்களும் உண்டு. எங்கள் ஊரில் நாங்கள் வசிக்கும் தெருவுக்கு அடுத்த
தெருவில் வசிக்கும் ஓர் அண்ணன் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவருக்கு சொந்தமான
சொத்துக்களில் இருந்து வரும் வருமானம் அவரை அப்படி வாழ வைக்கின்றது. உதாரணமாக
இரண்டு கட்டிடங்களில் உள்ள வங்கி, அலுவலகம் என இவற்றில் இருந்து வரும் வருமானம் மாதம் ஒரு லட்சத்தை
தாண்டும்.
வெளிநாடு சென்று சம்பாதித்து பிறகும் இங்கு வந்து கஷ்டப்படுபவர்கள்
பலர் உண்டு. ஆனால் வெளிநாடு சென்று கடினமாக உழைத்துவிட்டு இங்கு வந்த ஒருவர்
இப்போது விவசாயம் பார்க்கின்றார். அது அவருக்கு பொழுதுபோக்குத்தான் பொதுநலச் சேவைதான் அவருடைய வேலை. ஒரு
கார் வைத்துக் கொண்டு கிராமத்தில் அவர் செய்யும் செலவுக்கு அதிகமான வருமானம் அவரிடம் இருக்கும் தென்னை மரங்களே
தரும். இவர்களின் வாழ்க்கையை நிதி சுதந்திர வாழ்க்கை என்று சொல்லலாம். இது
சோம்பேறித்தனம் அல்ல அறிவாளிக்கும்
முட்டாளுக்கும் உள்ள வேறுபாடு. அதேபோல் இது சுயநலமும் இல்லை நாற்பது வருடமாக ஒரே
வேலையை பிடித்துக் கொண்டு யாருக்கும் வழிவிடாமல் இருப்பதை விட இந்த வாழ்க்கை
மேலானது.
“உங்கள் உண்மையான செல்வம் என்பது
உங்களின் நேரமும் சுதந்திரமும் தான்” அதை விற்றுத்தான் நாம் பணம் ஈட்டுவதாக மைக் மெலோனி (Mike
Maloney) என்பவர் தன் “பணத்தின் மறைக்கப்பட்ட ரகசியம்” (Hidden
Secrets of Money) என்ற பதிவில் கூறுகின்றார். நமது
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவையே அடிப்படையானது. முதலில் உங்களுக்கு என்ன வேண்டும்
என்று சிந்தனை செய்யுங்கள், உங்கள் சுதந்திரம் மற்றும் வாழ்க்கையைப்பற்றி சிந்தனை செய்யுங்கள் பிறகு அதற்கு இப்போது நீங்கள் என்ன
செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள். என் குடும்பம் ஏழை, பணம் இல்லை, படிப்பில்லை, உதவ யாரும் இல்லை என்று காரணம் தேட வேண்டாம். இவை எதுவுமே தேவை
இல்லை. நிதி சுதந்திரத்திற்கு தேவை வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும்
நிதிக்கல்வியும் தான்… (தொடரும்).
No comments:
Post a Comment