Thursday, 7 April 2016

Financial Freedom Introduction Post 4 (Tamil)

Celebrating Mindset

வாழ்க்கையைக் கொண்டாடும் மனோநிலை

                                 புறத்தில் உள்ள வறுமையை காட்டிலும் அகத்தில் உள்ள வறுமையே அபாயகரமானது. நிதி சுதந்திரத்தின் பெரும் பகுதி, இது என்னடா வாழ்க்கை?’, என்ற எண்ணம் தோன்றாமல் உங்கள் இதயமும் மனமும் அமைதியாக இருப்பதேஎன்று அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகர் சுஸே ஓர்மன் (Suze Orman) குறிப்பிடுகின்றார். ஒரு குழந்தை நாளொன்றுக்கு இருநூறு முறை சிரிக்கின்றதாம்.  வயதாக ஆக இந்த எண்ணிக்கை  குறைகின்றதாம்.  ஒரு பொம்மையை குழந்தையிடம் காட்டினால் அக்குழந்தை சிரிக்கும் அது ஒன்றும் நகைச்சுவையல்ல, இதையே ஒரு பெரியவரிடம் செய்தால் கோபப்படுவார்.  எப்படியிருந்தவர் இப்படியாகிவிட்டார் பாருங்கள்என்று தென்கச்சி கோ. சுவாமிநாதன் ஐயா கூறுகின்றார். குழந்தையிடம் எந்த தன் முனைப்பும் (EGO) இல்லை.  தன்முனைப்பு தான் நமது ஆனந்தத்தை மறைக்கின்றது  என்று நமது மெய்ஞ்ஞான நூல்கள் குறிப்பிடுகின்றது.

                நமது ஆனந்தத்திற்கு நகைச்சுவையோ அல்லது கஞ்சாவில் உள்ள ஆனந்தமைடோ (Anandamide) தேவை இல்லை. நமது இயல்பே மகிழ்ச்சிதான். அப்படியிருந்தும் நம் தன்முனைப்பானது நமது வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம், மதிப்பு, பதவி என எதையாவது ஒன்றை சார்ந்துள்ளது. அதற்காக நாம் செய்யும் செயல்கள் நம்மை சில நேரம் இன்பத்திலும், சில நேரம் துன்பத்திலும் உட்படுத்துகின்றன. அதேபோல், குழந்தையிடம் எந்த நிகழ்வைப் பற்றிய அக்கறையும்  இல்லை.  ஆனால் நம்மிடமோ நடந்த மற்றும் நடக்க இருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனையாக உள்ளது. இந்த சிந்தனையால்  தான் நமது தற்போதைய மகிழ்ச்சி சிறைப்பட்டுள்ளது.     இதை வேறு விதமாக கூறவேண்டும் என்றால் நமது மகிழ்ச்சி என்பது நமது வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகளை பொறுத்துதான் உள்ளது.
             
              நிகழ்வுகளை பொது நிகழ்வுகள் என்றும், தனிப்பட்ட நிகழ்வுகள் என்றும் இரண்டாக பிரிக்கலாம்.  பொதுநிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் அவை நம்மை பாதிக்க நாம்தான் அனுமதிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. பெட்ரோல் விலையேற்றம் சைக்கிளில் செல்பவர்களையும், பெறும் பணக்காரர்களையும் பாதிப்பதில்லை.  பொதுநிகழ்வு என்றாலும் அதனை மதிப்பிடுவதும் அல்லது ஏற்றுக்கொள்ளுவதும் ஒருவருடைய தனிப்பட்ட விசயம் அல்லது தனிபட்ட நிகழ்வே எனலாம்.
  “இந்த தொழில்நுட்ப காலத்தில் மனிதன் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டான், அமெரிக்காவில் என்ன நடந்தாலும் தெரிகின்றது ஆனால் பக்கத்துவிட்டில் உள்ளவரை தெரியவில்லைஎன்று ஒருமுறை முனைவர் கு. ஞானசம்பந்தம் ஐயா கூறினார்.  கிரேசி மோகன் அவர்கள் சொல்வதைப்போல் இப்போதெல்லாம் கனவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே கூட்டு குடும்பம் என்ற நிலையில் உள்ளோம்.  இங்கு எல்லா நிகழ்வுகளுமே தனிப்பட்ட நிகழ்வுகள் ஆகிவிட்டன.  இவையே நமது மகிழ்ச்சியை தீர்மானிக்கின்றன.  இந்த தனிப்பட்ட நிகழ்வுகள் நமது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றாலும்ää  நாமே நமது கட்டுபாட்டில் இல்லாதபோது இந்த நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவது அசாத்தியமான ஒன்று.

            நமது கட்டுப்பாட்டு மையம் நமது மனம் தான். நிகழ்வுகள் நமது மகிழ்ச்சியை பாதிக்கின்றன அதேசமயத்தில் நமது மனோநிலையைப் பொறுத்துதான் நமது மகிழ்ச்சியும் அமையும். ஒரே மாதிரியான நிகழ்வுகளே நமக்கு சில நேரம் மகிழ்ச்சியையும் சிலநேரம் துயரத்தையும் தந்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு காதல் ஜோடி பூங்கா ஒன்றில் உலாவிக்கொண்டு இருந்தனர். அப்போது பூங்காவில் இருந்த கல் ஒன்றில் அப்பெண் தடுக்கி விழுந்துவிட்டாள். உடனே அந்த காதலன் பதறிப்போய் அந்த பெண்னை தூக்கிவிட்டுவிட்டு தடுக்கிய கல்லை பார்த்து சனியன் பிடித்த கல்லேஎன்று கோபப்பட்டான். இருவரும் கல்யாணம் செய்துகொண்டு சில வருடங்களுக்கு பிறகு அதே பூங்காவில் உலாவிக்கொண்டு இருந்தனர் மீண்டும் அதே கல் தடுக்கி அப்பெண் விழுந்தாள். எந்த பதட்டமும் இன்றி திரும்பிய காதலன் (இப்போது கணவன்) பெண்னைப் பார்த்து சனியனே பார்த்து வரமாட்டாயா?” என்றான். இதுதான் சனிப்பெயர்ச்சி என்று மனதின் மாறுபாட்டுக்கு சுகி.சுவம் ஐயா கூறும் கதை இது.
        
       நமது மகிழ்ச்சி மனோநிலையை பொறுத்தது. மனமோ தொடர் மாறுதலுக்கு உட்பட்டது. ஒரு தத்துவ புத்தகத்தை படித்துவிட்டு ஓர் ஆண்டுக்கு பிறகு அதே புத்தகத்தை நாம் படித்தால் மீண்டும் புதிதாக உணரலாம், காரணம் நமது மனோநிலை மாற்றமே. தொடர்ந்து மாறும் இந்த மனோநிலையும் பெரும்பாலும் நமது மனப்பான்மை அல்லது மனப்போக்கு (Attitude) மற்றும் பழக்கம் (Habit) சார்ந்துதான் இருக்கும். நமது இப்போதைய மனோநிலை வெளிமனதில் இருந்தும் மனப்போக்கு மற்றும் பழக்கம் இவை ஆழ்மனதில் இருந்தும் இயங்குகின்றது அறிவியல் கூறுகின்றன. தள்ளிப்போடுவது நமது மனப்போக்கு என்றால் அது நமது எல்லா விசயத்திலும் பிரதிபலிக்கும், நேர்மறை சிந்தனை நமது மனப்போக்கு என்றால் அதுவும் எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.
             செல்வம் மற்றும் பணம் இவற்றில் நமது மனோநிலை அல்லது மனப்போக்கு எப்படி உள்ளதோ அதைப்பொறுத்துதான் பெரும்பாலும் நமது; வாழ்க்கையின் மகிழ்ச்சி; அமையும்.  பணம் இல்லாதவரின் கொண்டாட்டம் பகலில் எரியும் விளக்குப்போல்தான். பெரும் பணம் படைத்த பலரும்; மகிழ்ச்சியாக இல்லை என்பதும் எதார்த்தம். பணத்தை மையமாகக்கொண்டு நமது மனப்போக்கை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று பணத்தின் பின் ஓடும் மனோநிலை/மனப்போக்கு, மற்றொன்று இருக்கும் பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் மனோநிலை/மனப்போக்கு.
              உங்களிடம் என்ன மனப்போக்கு உள்ளது?. உங்களின் நேரம் எதற்காக அதிகம் செலவிடப்படுகின்றது பணத்திற்;காகவா? அல்லது மகிழ்ச்சிக்காகவா? சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள் எதற்காக நீங்கள் அதிகம் செலவிடுகின்றீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் மனப்போக்கு அமையும். திரைப்படங்களில் காட்டப்படுவது போல் பணக்காரன் கவலையுலும் அல்லது மன இறுக்கத்திலும் (Tension) உள்ளான் என்பதும், ஏழை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளான் என்பதும் பொய்.  நீங்கள் ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் எந்த மனோநிலையில் உள்ளீர்கள் என்பதே முக்கியம். பணத்தைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் மனப்போக்குதான் உங்களை மகிழ்ச்சியடைய செய்யும்.  பணத்தின் பின் ஓடும் ஒரு மனதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

              பணம் வேண்டாம் என்றோ அல்லது தேவையில்லை என்றோ இதற்கு அர்த்தமில்லை.  பணம் மிக முக்கியமான ஒன்றுதான்.  ஆனால் பணத்தின் பின் ஓடினால் பணம் வராது. கடின உழைப்பு, பிறகு வெற்றி, பிறகுதான் மகிழ்ச்சி என்ற கருத்து பலரிடம் உள்ளது. ஆனால் நீங்கள் மகிழச்சியாக  இருந்தால்தான் உங்களால் நன்றாக உழைக்க முடியும் என்றும் யார் மகிழ்ச்சியாகவும் நன்றிவுணர்வுடனும் உள்ளார்களோ அவர்களிடமே பணம் குவிகின்றது என்றும் நவீன ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதனால் நீங்கள் தேடவேண்டியது மகிழ்ச்சிக்கான வழியைத்தான். உங்கள் தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள் அதற்காக நன்றியுணர்வுடன் இருங்கள்.

                “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுஎன்ற கண்ணதாசன் அவர்கள் வரியை நினைவில் வையுங்கள். மனநிம்மதியே மிக சிறந்த செல்வம் நிம்மதி அற்ற மனதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.  மகிழ்ச்சிதான் மிக பெரிய வெற்றி. அதனால் ஓவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு எது மகிழ்ச்சியை தருகின்றதோ அதை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் வாழ்க்கையைக் கொண்டாடும் மனோநிலைக்கே பணம் வசப்படும்… (தொடரும்).

No comments:

Post a Comment