Sunday, 10 April 2016

Financial Freedom Introduction Post No:1 (Tamil)

Financial Freedom (Financial Well-being)

நிதி சுதந்திரம்

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

       பொருள் செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்பது உலக பொதுமறை.  வாழ்க்கைக்கும் வாழ்க்கையில்  மகிழ்ச்சிக்கும்; பொருள் அல்லது பணம் தான் ஆதாரமே.  அதனால்தான் ஆதாரம் (பொருளாதாரம்) வலுவாக இல்லாதோர் வாழ்க்கை நரகமாகிவிடுகின்றது. இந்த ஆதாரத்திற்காகவே நாம் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டு உள்ளோம். ஓரு வியாபாரத்திலோ அல்லது வேலையிலோ ஈடுபட்டு ஒவ்வொருநாளும் பணத்தை தேடுகின்றோம். இதில் பலரும் தமது வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று தெரியாததாலும், மற்றவருடன் உள்ள போட்டி மனப்பான்மையாலும் பணத்தை மட்டும் தொடர்ந்து தேடிக்கொண்டே உள்ளனர்.

        இவை எல்லாமே வாழ்வதற்காகதான் என்று  சொல்லிக்கொண்டு நாம் தேடும் இந்த பணத்திற்காக நம் வாழ்வின் பெரும் பகுதியை செலவிடுகின்றோம்.  உதாரணமாக ஒருவர் 8 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக் கொண்டால் அவர் தன் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை வேலைக்காகவே செலவிடுகின்றார் (10, 12 மணிநேர வேலை செய்பவர்கள் நிலை என்ன?...). இதில் தூக்கத்திற்கு ஒரு பங்கு (8 மணி நேரம்) செலவிடுகின்றார். மீதம் உள்ள சில மணிநேரமும் அந்த வேலை அல்லது வியாபாரம் பற்றிய அல்லது தங்கள் பொருளாதார நிலைப்பற்றிய சிந்தனை அல்லது செயலாகவே உள்ளது.

     விக்கி ராபின் மற்றும் ஜோ டொமின்கஸ் (Vicki Robin and Joe Dominguez) என்ற இருவரும் உங்கள் பணம் அல்லது உங்கள் வாழ்க்கை(Your Money 0r Your life) என்ற தங்கள் புத்தகத்தில்  உங்களுக்கு எது வேண்டும் பணமா? அல்லது வாழ்க்கையா?” என்று கேட்கின்றார்கள்.  உங்களுக்கு  எது வேண்டும்இரண்டும் வேண்டும் என்பதுதான் என் பதிலும். இருந்தாலும் வாழ்க்கைதான் முக்கியம் தினம் தினம் பத்திரிக்கைகளைப் பார்க்கும் போது மக்களுக்கு இது தெரியவில்லையோ என்ற எண்ணம் தோன்றுகின்றது. வாழ்க்கையில் எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் தேடிக்கொள்ளலாம். ஆனால் எவ்வளவு பொருள் அல்லது பணம் கொடுத்தாலும் வாழ்க்கையையோ அல்லது உயிரையோ வாங்க முடியாது. ஆதலால் வாழ்க்கைக்கே முதலிடம். வாழ்வதற்குத்தான் பொருள் வேண்டும் (வாழ்வதிலும் பொருள் வேண்டும்).

               “சேமிப்பு என்பது சிறந்த பழக்கம் ஆனால் அதுவே அதிர்ஷ்டம் அந்த பழக்கம் நம் பெற்றோரிடம் இருந்தால்என்று வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchill) குறிப்பிடும் அந்த அதிர்ஷ்டம் நம்மில் பலருக்கு இல்லை. அதிர்ஷ்டம் இருந்தாலும் இல்லை என்றாலும் நாம் ஒரு வேலை அல்லது வியாபாரத்தில் ஈடுபடுகின்றோம்.  இதுவரை சரி ஆனால் எவ்வளவு நாள் இந்த வேலையை நாம் செய்யப்போகின்றோம்? அறுபது வயது வரையா? இல்லை அதற்கு மேலுமா? எவ்வளவு நாள் நாம் வேலை செய்யப்போகின்றோம் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? வேலைத்தேடும் போது நிரந்தர வேலையாக நாம் தேடினாலும் பலருக்கு நிரந்தரமாக வேலைச்செய்ய விருப்பமில்லை. இருந்தும் என்றாவது ஒரு நாள் ஓய்வு வரும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டுள்ளோம்.

        தஞ்சையில் பணிபுரியும் ஒர் வங்கி ஊழியரை எனக்கு தெரியும். அவர் ஒருமுறை கூறியதாவது என் ஓய்வுதிய பணம் எல்லாம் நான் வாங்கியுள்ள வீட்டு கடனுக்கே சரியாக இருக்கும் அதனால் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஒரு வேலையை தேடியாக வேண்டும்என்றார். அவர் மட்டுமில்லை அறுபது வயதை கடந்தும் வேலை செய்யும் பலரை நாம் பார்க்கலாம். இது போன்று வேலை செய்பவர்களில் பணத்திற்காக என்பதையும் தாண்டி நாற்பது வருடகால வாழ்க்கைமுறையின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு மனோநிலை பலரிடம் உள்ளது. ஏன் இந்த நிலை?

         எட்டு மணி நேர வேலையை வெறுத்தோ அல்லது பொதுவாகவே வியாபாரத்திற்கு வரும் பலரும் தெரிந்து கொள்ளும் ஓர் உண்மை வியாபாரம் என்பது நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிய பல பொறுப்புகளைக் கொண்டது”. என் நண்பனின் அப்பா ஒரு மளிகைக் கடை வைத்திருக்கின்றார். உணவு அல்லது வேறு வேலைக்காக ஓரிரு மணி நேரம் தவிர காலை ஏழு மணி முதல் இரவு பதினோரு மணி வரை அந்த கடையிலேயே அவர் நேரத்தை செலவிடுவார். தொடர்ந்து நின்று கொண்டு இருப்பதால் கால் வலி, உடல் நோவு என பல பிரச்சனைகளை அவர் சந்தித்தாலும் அவரால் ஓய்வெடுக்க முடியவில்லை. சிறிய கடை என்றாலும் பெரிய கடை என்றாலும் நேரமும் நோயும் ஒரு பொருட்டே இல்லை. இது போன்ற நிலையை நாம் பலரிடம் பார்க்கின்றோம். ஏன் இந்த நிலை?

        இன்னும் பலரும் எதாவது ஒரு வேலை, ஒரு தொழில் அல்லது ஒரு வியாபாரம் என ஈடுபட்டு பணத்தை ஈட்டினாலும் வாழ்க்கைக்கு அவசியமான ஆரோக்கியம், மன அமைதி, உறவுகள், சில நேரம் வாழ்க்கையையும் உயிரையும் கூட இழக்கின்றார்கள். வேலைக்கு செல்வதையோ, வியாபாரம் செய்வதையோ அல்லது பொருள் ஈட்டுவதைப் பற்றிய கேள்வி இல்லை இது. ஆனால் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனை பலருக்கு இல்லாமல் போனதைப் பற்றிதான் இப்போது கேள்வி!

          வயது ஒத்துழைக்காத போதும் சில நேரம் உடல் அல்லது மனம் ஒத்துழைக்காத போதும் நாம் வேலை செல்ல வேண்டிய அல்லது வியாபாரம் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஏன் என்றால் நமது வாழ்க்கை அந்த வேலையைச் சார்ந்தே (வருமானம்) உள்ளது. வேலையை நாம் விட்டாலோ அல்லது வேலை நம்மை விட்டுவிட்டாலோ நமது பொருளாதாரம் முக்கியமாக வருமானம் பாதிப்படைகின்றது. நம்மில் பலரின் வாழ்க்கையும் இந்த நிலைதான். இதற்கு நிதிசார் வாழ்க்கை முறை (Financial Dependent) என்று பெயர். இவ்வாழ்க்கை முறைக்கு நேர் எதிரான ஒன்றுதான் நிதி சுதந்திரம் (Financial Freedom) ஆகும்.

          வேலையில்லாதவர்களுக்கு இருக்கும் மன இறுக்கம் ஒரு பக்கம் இருக்க வேலையில் இருப்பவர்கள் சந்திக்கும் மன இறுக்கம் அதிகமாகிக் கொண்டுள்ளது. பிடிக்கவில்லை என்று வேலையை விடுவதும் ஆள் குறைப்பு என்ற பெயரில் வேலையை விட்டு வெளியேற்றப்படுவதும் எதார்த்தமாக உள்ள இக்காலத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று நிதி சுதந்திரம். தீவிரமான ஒரு வேலையை மட்டும் சார்ந்து இல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட வருமான வாய்ப்புகளை (செலவுகளை விட அதிகமாக) கொண்டுள்ள நிலைக்கு நிதி சுதந்திரம் என்பர். இப்படியும் வாழ முடியுமா? முடியும். யார் வேண்டுமானலும் நிதி சுதந்திரத்துடன் வாழலாம். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்…. (தொடரும்).

No comments:

Post a Comment