Never
depend on a single income
தீவிரமான வேலையை சாராதிருத்தல்
மகிழ்ச்சியாக நீங்கள் விரும்பி செய்யும் தொழில் அல்லது வேலையைப்பற்றி
நான் ஒன்றும் சொல்லவில்லை. அப்படி ஒரு
வேலை உங்களிடமிருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள் ஏனெனில் அந்த வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலானவர்கள் அவர்கள் விரும்பாத அல்லது
வெறுக்கின்ற ஒரு வேலையைதான் செய்கின்றனர்.
பிடிக்கவில்லை என்று வேலையை விடுபவர்கள் வெகு சிலரே. பலர், பல தொல்லைகளுக்கு மத்தியில் வேலையை தொடர்வதற்கு காரணம் அந்த வேலை
இல்லை என்றால் தனது அடிப்படைத் தேவைக்கே ஆபத்து என்பதால்தான். இந்த வேலையை
சார்ந்து மட்டுமே உங்கள் வருமானம் அல்லது நிதி நிலை இருந்தால் அது நிதி
சுதந்திரமாகாது.
வருமானத்திற்காக நாம் தேடிய வேலை அல்லது வியாபாரம் நமது உடல்
ஆரோக்கியம், மன அமைதி, சுதந்திரம், வாழ்க்கை மற்றும் சில நேரம் உயிரையும்
பறித்துக்கொள்கின்றன. இதுபோன்ற வேலையையே தீவிரமான வேலை என குறிப்பிடுகின்றோம்.
அதிதீவிரமான வேலைகளும் இங்கு உண்டு நமது தந்தை பெரியார் அவர்கள் ஜாதியின் பெயரால் மக்களிடையே இருந்த
ஏற்றத்தாழ்வை ஒழிக்கவே போராடினார். ஆனால் இன்றோ ஏற்றத்தாழ்வு ஜாதி என்னும் ஆடையை
கலைந்துவிட்டு பதவி என்னும் ஆடையை அணிந்து தாராளமாக உலாவருகின்றது. சுயமரியாதை, மனிதநேயம் எல்லாம் பதவியின் பெயரால் பறிக்கப்பட்டு விட்டன. ஒரு உயர் அதிகாரிக்கும் கடைநிலை ஊழியனுக்கும்
இடையே உள்ள ஏற்றதாழ்வு, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள
ஏற்றத்தாழ்வு என கார்ப்பரேட் (Corporate) முதல்
கார்பபரேசன் (Corporation) வரை எல்லா இடத்திலும் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு மனித மனதை
புண்படுத்தாமல் விடுவதில்லை.
சமீபத்தில் ஒரு
மருத்துவ கழக கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். அங்கு வந்த டாக்டர் ஒருவர் பேசியதாவது
“நான் வாரத்தில் ஏழு நாளும்
மருத்துவமனைக்கு செல்கின்றேன், நாள் ஒன்றுக்கு 10-12 மணி நேரம் உழைக்கின்றேன், “ஏன் உனக்கெல்லாம் ஒரு குடும்பம்?” என்று என் மனைவி பலமுறை கேட்டதுண்டு” என்றார். தூங்குவதற்கு மட்டும்
வீட்டுக்கு சென்றுவிட்டு கடையிலேயே காலத்தை தொலைத்த வியாபாரிகள் பலர் இங்கு உண்டு.
வேலை, தொழில் அல்லது வியாபாரம் மட்டுமே
வாழ்க்கை அல்ல. வாழ்வதற்காகதான் இவையேல்லாம். உங்கள் வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும், உறவுகளுக்கும், ஆரோக்கியதிற்கும் முக்கியதுவம்
கொடுங்கள். இந்தியாவில் 75% சதவிகித வேலை செய்யும் பெண்கள் உடல்
உபாதைகளுக்கு காரணம் அந்த வேலைதான் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 70% அதிமான மக்களிடம் வேலை- வாழ்வு சமனிலை (Work-Life
Balance) இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால் எனக்கு தெரிந்து வேலை-வாழ்வு சமனிலைப் பற்றியே தெரியாதவர்கள் இங்கு அதிகம்.
ஜேஸி (JCI) என்ற உலகளாவிய
அமைப்பின் பட்டயத்தில் (Creed) பில் ப்ரவுண்ப்பில்டு (Bill Browfield) “பொருளாதார
நீதியை சுதந்திரமான முறையில் சுதந்திரமான மனிதர்களால் சிறந்தமுறையில் அடைய
முடியும்” என்று குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடும் சுதந்திர மனிதனையும், பொருளாதார நீதியையும் அதை அடையும்
சுதந்திரமான முறையையும் பற்றி ஓர் கதையின் மூலம் விளக்க முற்படுகின்றேன். ராமுவும், சோமுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ராமு அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய
பண்ணையார் வீட்டில் துணிகளை துவைத்து வந்தான்.
சோமுவோ அந்த ஊரில் வாழ்ந்த பத்து நடுத்தர மக்களின் துணிகளை வாங்கி துவைத்து
வந்தான். ராமுவுக்கு பண்ணையார் மாதம் ரு.100 சம்பளம் கொடுத்தார். சோமு தன் பங்குக்கு அனைவரிடமும் ரு.10 வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ.100 சம்பாதித்து வந்தான்.
சில வருடங்களுக்கு பின், பணவீக்கம் பற்றியோ, பண மாயைப் பற்றியோ ஏதும் அறியாத அவ்விருவரும். தங்கள் வருமானம் தங்களின் வாழ்க்கைச் செலவுக்கு
போதவில்லை என்று உணர்ந்தனர். சோமு தன்
நிலையை ஒவ்வொருவரிடமும் எடுத்துக்கூறி மாதம் ரூ.12 கேட்டுப் பெற்றான். அந்த பத்து வீடுகளில் ஓரிருவர் தரமறுக்கவே “எல்லாரிடமும் ரூ.12 பெற்றுக்கொண்டு, உங்களுக்கு மட்டும் ரூ.10 வாங்கிக் கொண்டு வேலை செய்ய என்னால்
முடியாது” என்று மறுத்தான். பிறகு அவர்களும் சோமுவுக்கு ரூ.12 தர முடிவு செய்தார்கள். ஆனால் ராமு தன் முதலாளியிடம் தயங்கி தயங்கி
சம்பளம் உயர்வு கேட்க, பண்ணையார் ‘விருப்பம் இருந்தால வேலைச் செய், இல்லை என்றால் வேறு வேலையை பார்’ என்று சொன்னார். ராமு பதில் கூற முடியாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.
ஆண்டுகள் செல்ல செல்ல முக்கியமாக பணவீக்கத்துக்கு ஏற்ப சம்பளத்தை
உயர்த்த வேண்டும் என்பது தான் பொருளாதார நீதி, அதை சோமுவை போல் சுதந்திரமான மனிதர்களால்தான் பெறமுடியும்.
சோமுவுக்கு அவர்களில் ஒருவர் தரவில்லை என்றாலும்; ரூ.108 கொண்டு வாழ முடியும். ஆனால்
ராமுவுக்கு அந்த வேலை இல்லை என்றால் வருமானமே இல்லை. ராமுவைப்போல் ஒரே ஒரு வருமானத்தைக் கொண்டு
மட்டுமே வாழ்பவர்களால் தங்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமையயை கூட கேட்க
முடியாது. வலுவான வருமான வாய்ப்புள்ள ஒரு
சுதந்திர மனிதனால் தான் தனது உரிமையை சுதந்திரமான முறையில் நிலைநாட்ட
முடியும்.
ராமுவைப்போல் இங்கு பலரை நாம் பார்க்கலாம், ஆறு வருடங்களுக்கு மேலாக எங்கள் ஊரில் உள்ள கடைகளில் வேலை செய்யும்
பெண்களுக்கு சம்பளம் ரூ.2500 - ரூ.3000 தான். இங்கு மட்டுமில்லை எல்லா ஊரிலும் இப்படிதான். எனக்கு தெரிந்த பணவீக்கத்திற்கு நிகராக சம்பள உயர்வு கேட்பதும் ஒரு குறிப்பிட்ட
துறையில் வேலை செய்பவர்கள் மட்டும்தான். மற்ற அனைவரும் வெறும் வருமான உயர்வு
வேண்டும் என்றுதான் புலம்புகின்றனர்.
பணவீக்கம் மற்றும் பணமாயைப் பற்றி சரியான நிதிகல்வி அறிவு இல்லை என்பதும், பொதுவாகவே இப்போதைய கல்வி சரியாக இல்லை
என்பதே இதற்கு காரணம்.
“தன்னைப் பிறர் ஏவாமல் உண்பதுவே உண்” என்று ஒளவைப்பாட்டி சொன்ன கல்வி எங்கே? நன்றாக படித்து நல்ல வேலையை தேடிக்கொள்
எனறு வேலை செய்வதற்கு மட்டும் சொல்லி தரும்; கல்வி எங்கே?. வேலை மட்டுமே பாதுகாப்பு என்றும் எல்லாரும் வேலைத் தேடினால் உலகம்
ஸ்தம்பித்துவிடும். வேலைக் கொடுக்கவும்
பலர் வேண்டும். “உலகில் பணக்காரர்கள் 1% மட்டுமே இருப்பதற்கு காரணம் வியாபாரம்
மற்றும் முதலீடு பற்றிய சரியான நிதி கல்வி இல்லாமையே” என்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert
Kiyosaki). குறிப்பாக நமது
நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த நிதி கல்வி எல்லோருக்கும் தேவை. நமது கல்வி முறையில் மாற்றம் வந்தால்தான்
பொருளாதார நீதியை நிலை நாட்டவும்ää பொருளாதார வளர்ச்சி அடையவும் முடியும்….(தொடரும்).


No comments:
Post a Comment