Wednesday, 6 April 2016

Financial Freedom Introduction Post 5 (Tamil)

Never depend on a single income

தீவிரமான வேலையை சாராதிருத்தல்
                             
          மகிழ்ச்சியாக நீங்கள் விரும்பி செய்யும் தொழில் அல்லது வேலையைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை.  அப்படி ஒரு வேலை உங்களிடமிருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள் ஏனெனில் அந்த வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை.  பெரும்பாலானவர்கள் அவர்கள் விரும்பாத அல்லது வெறுக்கின்ற ஒரு வேலையைதான் செய்கின்றனர்.  பிடிக்கவில்லை என்று வேலையை விடுபவர்கள் வெகு சிலரே. பலர், பல தொல்லைகளுக்கு மத்தியில் வேலையை தொடர்வதற்கு காரணம் அந்த வேலை இல்லை என்றால் தனது அடிப்படைத் தேவைக்கே ஆபத்து என்பதால்தான். இந்த வேலையை சார்ந்து மட்டுமே உங்கள் வருமானம் அல்லது நிதி நிலை இருந்தால் அது நிதி சுதந்திரமாகாது.

                வருமானத்திற்காக நாம் தேடிய வேலை அல்லது வியாபாரம் நமது உடல் ஆரோக்கியம், மன அமைதி, சுதந்திரம், வாழ்க்கை மற்றும் சில நேரம் உயிரையும் பறித்துக்கொள்கின்றன. இதுபோன்ற வேலையையே தீவிரமான வேலை என குறிப்பிடுகின்றோம். அதிதீவிரமான வேலைகளும் இங்கு உண்டு நமது தந்தை பெரியார் அவர்கள் ஜாதியின் பெயரால் மக்களிடையே இருந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்கவே போராடினார். ஆனால் இன்றோ ஏற்றத்தாழ்வு ஜாதி என்னும் ஆடையை கலைந்துவிட்டு பதவி என்னும் ஆடையை அணிந்து தாராளமாக உலாவருகின்றது.  சுயமரியாதை, மனிதநேயம் எல்லாம் பதவியின் பெயரால் பறிக்கப்பட்டு விட்டன.  ஒரு உயர் அதிகாரிக்கும் கடைநிலை ஊழியனுக்கும் இடையே உள்ள ஏற்றதாழ்வு, முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு என கார்ப்பரேட் (Corporate) முதல் கார்பபரேசன் (Corporation) வரை எல்லா இடத்திலும் உள்ள இந்த ஏற்றத்தாழ்வு மனித மனதை புண்படுத்தாமல் விடுவதில்லை.    

சமீபத்தில் ஒரு மருத்துவ கழக கூட்டத்தில் கலந்துக்கொண்டேன். அங்கு வந்த டாக்டர் ஒருவர் பேசியதாவது நான் வாரத்தில் ஏழு நாளும் மருத்துவமனைக்கு செல்கின்றேன், நாள் ஒன்றுக்கு 10-12 மணி நேரம் உழைக்கின்றேன், “ஏன் உனக்கெல்லாம் ஒரு குடும்பம்?” என்று என் மனைவி பலமுறை கேட்டதுண்டுஎன்றார். தூங்குவதற்கு மட்டும் வீட்டுக்கு சென்றுவிட்டு கடையிலேயே காலத்தை தொலைத்த வியாபாரிகள் பலர் இங்கு உண்டு. வேலை, தொழில் அல்லது வியாபாரம் மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வதற்காகதான் இவையேல்லாம். உங்கள் வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும், உறவுகளுக்கும், ஆரோக்கியதிற்கும் முக்கியதுவம் கொடுங்கள். இந்தியாவில் 75% சதவிகித வேலை செய்யும் பெண்கள் உடல் உபாதைகளுக்கு காரணம் அந்த வேலைதான் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. 70% அதிமான மக்களிடம் வேலை- வாழ்வு சமனிலை (Work-Life Balance) இல்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் எனக்கு தெரிந்து வேலை-வாழ்வு சமனிலைப் பற்றியே தெரியாதவர்கள் இங்கு அதிகம்.
                ஜேஸி (JCI) என்ற உலகளாவிய அமைப்பின் பட்டயத்தில் (Creed) பில் ப்ரவுண்ப்பில்டு (Bill Browfield) பொருளாதார நீதியை சுதந்திரமான முறையில் சுதந்திரமான மனிதர்களால் சிறந்தமுறையில் அடைய முடியும்என்று குறிப்பிடுகின்றார்.  அவர் குறிப்பிடும் சுதந்திர மனிதனையும், பொருளாதார நீதியையும் அதை அடையும் சுதந்திரமான முறையையும் பற்றி ஓர் கதையின் மூலம் விளக்க முற்படுகின்றேன்.  ராமுவும், சோமுவும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ராமு அந்த ஊரில் உள்ள ஒரு பெரிய பண்ணையார் வீட்டில் துணிகளை துவைத்து வந்தான்.  சோமுவோ அந்த ஊரில் வாழ்ந்த பத்து நடுத்தர மக்களின் துணிகளை வாங்கி துவைத்து வந்தான்.  ராமுவுக்கு பண்ணையார் மாதம் ரு.100 சம்பளம் கொடுத்தார்.  சோமு தன் பங்குக்கு அனைவரிடமும் ரு.10 வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ.100 சம்பாதித்து வந்தான்.

              சில வருடங்களுக்கு பின், பணவீக்கம் பற்றியோ, பண மாயைப் பற்றியோ ஏதும் அறியாத அவ்விருவரும்.  தங்கள் வருமானம் தங்களின் வாழ்க்கைச் செலவுக்கு போதவில்லை என்று உணர்ந்தனர்.  சோமு தன் நிலையை ஒவ்வொருவரிடமும் எடுத்துக்கூறி மாதம் ரூ.12  கேட்டுப் பெற்றான்.  அந்த பத்து வீடுகளில் ஓரிருவர் தரமறுக்கவே எல்லாரிடமும் ரூ.12 பெற்றுக்கொண்டு, உங்களுக்கு மட்டும் ரூ.10 வாங்கிக் கொண்டு வேலை செய்ய என்னால் முடியாதுஎன்று மறுத்தான்.  பிறகு அவர்களும் சோமுவுக்கு ரூ.12 தர முடிவு செய்தார்கள்.  ஆனால் ராமு தன் முதலாளியிடம் தயங்கி தயங்கி சம்பளம் உயர்வு கேட்க, பண்ணையார் விருப்பம் இருந்தால வேலைச் செய், இல்லை என்றால் வேறு வேலையை பார்என்று சொன்னார். ராமு பதில் கூற முடியாமல் தன் வேலையைத் தொடர்ந்தான்.

                ஆண்டுகள் செல்ல செல்ல முக்கியமாக பணவீக்கத்துக்கு ஏற்ப சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது தான் பொருளாதார நீதி, அதை சோமுவை போல் சுதந்திரமான மனிதர்களால்தான் பெறமுடியும். சோமுவுக்கு அவர்களில் ஒருவர் தரவில்லை என்றாலும்; ரூ.108 கொண்டு வாழ முடியும்.  ஆனால் ராமுவுக்கு அந்த வேலை இல்லை என்றால் வருமானமே இல்லை.  ராமுவைப்போல் ஒரே ஒரு வருமானத்தைக் கொண்டு மட்டுமே வாழ்பவர்களால் தங்களுக்கு தரவேண்டிய அடிப்படை உரிமையயை கூட கேட்க முடியாது.  வலுவான வருமான வாய்ப்புள்ள ஒரு சுதந்திர மனிதனால் தான் தனது உரிமையை சுதந்திரமான முறையில் நிலைநாட்ட முடியும். 
                ராமுவைப்போல் இங்கு பலரை நாம் பார்க்கலாம், ஆறு வருடங்களுக்கு மேலாக எங்கள் ஊரில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் ரூ.2500 - ரூ.3000 தான். இங்கு மட்டுமில்லை எல்லா ஊரிலும் இப்படிதான்.  எனக்கு தெரிந்த பணவீக்கத்திற்கு  நிகராக சம்பள உயர்வு கேட்பதும் ஒரு குறிப்பிட்ட துறையில் வேலை செய்பவர்கள் மட்டும்தான். மற்ற அனைவரும் வெறும் வருமான உயர்வு வேண்டும் என்றுதான் புலம்புகின்றனர்.  பணவீக்கம் மற்றும் பணமாயைப் பற்றி சரியான நிதிகல்வி அறிவு இல்லை என்பதும், பொதுவாகவே இப்போதைய கல்வி சரியாக இல்லை என்பதே இதற்கு காரணம்.


                                 “தன்னைப் பிறர் ஏவாமல் உண்பதுவே உண்என்று ஒளவைப்பாட்டி சொன்ன கல்வி எங்கே? நன்றாக படித்து நல்ல வேலையை தேடிக்கொள் எனறு வேலை செய்வதற்கு மட்டும் சொல்லி தரும்; கல்வி எங்கே?. வேலை மட்டுமே பாதுகாப்பு என்றும் எல்லாரும் வேலைத் தேடினால் உலகம் ஸ்தம்பித்துவிடும்.  வேலைக் கொடுக்கவும் பலர் வேண்டும்.  உலகில் பணக்காரர்கள் 1% மட்டுமே இருப்பதற்கு காரணம் வியாபாரம் மற்றும் முதலீடு பற்றிய சரியான நிதி கல்வி இல்லாமையேஎன்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki). குறிப்பாக நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த நிதி கல்வி எல்லோருக்கும் தேவை.  நமது கல்வி முறையில் மாற்றம் வந்தால்தான் பொருளாதார நீதியை நிலை நாட்டவும்ää பொருளாதார வளர்ச்சி அடையவும் முடியும்….(தொடரும்).

Monday, 4 April 2016

Financial Freedom Introduction Post 6 (tamil)

Be income Secure

போதுமான வருமானம்

                குந்தித் தின்றால் குன்றும் மாளும்”- என்பது பழமொழி. உழைப்பின்றி செலவு செய்தால், மலை அளவு செல்வம் இருந்தாலும் அழிந்துவிடும் என்றுப் பொருள்.  அக்காலத்தில் உழைப்பு என்பது பெரும்பாலும் உடல் உழைப்பு தான்.  பிறகு மதி (மனம்) உழைப்பும் அல்லது புத்தியின் உதவியுடன் உழைப்பதுதான் உடல் உழைப்பை விட சிறந்தது. ஆனால் இக்காலத்தில் பணத்தின் உழைப்பு அதாவது நிதி முலதன வளம் ;(Financial Capital Resource) தான் இப்போதைய மனித வளத்தை விடவும் மிக சிறந்த வளமாக கருதப்படுகின்றது. வருமானமில்லாத அல்லது பயன்தராத உழைப்பு என்றும் வீண்தான்.  ஒருவன் தினமும் கடின உழைப்பை மட்டும் கொடுத்து அதறற்கு தக்க வருமானமில்லை என்றால் அவரை அடிமை என்று சொல்வார்கள்.  இக்காலத்திலும் மக்கள் பலர் கடினமாக உழைக்கின்றனர்.  ஆனலும் அதற்குதக்க வருமானமில்லை. 

                வருமானம் மிக முக்கியமான ஒன்று, நீங்கள் பணக்காரனாக இருக்கலாம் ஆனால் தொடர்ந்து உங்கள் செலவுக்கான வருமானமில்லை என்றால் நீங்கள் ஏழையாவது உறுதி, பலர் ஏழையானதும் இப்படித்தான்.  வருமானம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ஒரு வேலைதான். நம்மில் பலருக்கு தெரிந்தது அது மட்டும்தான். நல்ல வேலையாக இருந்தால் மிக்க நல்லது, அப்படி இல்லை என்றால் வருமானம் எவ்வளவு பிரமாதமாக இருந்தாலும் பயனில்லை.  ஆறு இலக்க எண் வருமானத்தில் வேலை செய்து மாரடைப்பு வந்தவர்களும்.  உயிரை விட்டவர்களும் இங்கு உண்டு. அதேபோல் பலருக்கும் வருமானம் பற்றிய அக்கறையிம் இல்லை, வருமானத்தை உயர்த்துவது எப்படி என்ற சிந்தனையும் இல்லை.  வேலையில் இருப்பவர்களை பொறுத்தவரை பதவி உயர்வு அல்லது ஆண்டு இறுதி ஊதிய உயர்வு மட்டுமே தங்களின் வருமான உயர்வு என்றும், தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபடும் பலர் வரும்போது வரும் என்ற அலட்சியத்திலும் உள்ளனர், இன்னும் சிலரோ தங்கள் தொழில் அல்லது வியாபாரம் உண்மையிலேயே லாபத்தில்தான் உள்ளதா என்ற கணக்கோ உணர்வோ இல்லாமல் பிழைத்துக் கொண்டுள்ளனர் .

                                 இவ்வாறு நீங்கள் ஓர் வேலையிலோ அல்லது தொழிலிலோ ஈடு;பட்டு வரும் வருமானத்திற்கு சம்பாதித்த வருமானம் (Earned Income) எனப்படும்.  ஆனால் சம்பாதித்த வருமானம் மட்டும் வைத்திருப்பது நிதி சுதந்திரமாகாது.  நீங்கள் சம்பாதித்த பணத்தையோ அல்லது உங்கள் அறிவு, திறமையைக் கொண்டோ நீங்கள்  இன்னும் இரு வகையான வருமானத்தை அதாவது முதலீட்டு வருமானம் (Investment Income) மற்றும் செயலற்ற வருமானத்தை (Passive Income) ஏற்படுத்த வேண்டும். இவ்விரு வகையான வருமானமே நிதி சுதந்திரத்தை கொடுக்கும். சுதந்திரம் இல்லாமல் வரும் அதிக அளவு வருமானம் முக்கியமில்லை. சுதந்திரமாக உங்கள் செலவுக்கு அதிகமாக வருமானம் வந்தால் போதுமானது இதையே போதுமான வருமானம் என்று குறிப்பிடுகின்றோம். போதுமான வருமானம் என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுப்படும்.
                                வருமானத்தை அதிகரிக்கவும் அதே சமையத்தில் வரவறிந்து வாழ்வதுமே சிறந்தது. குசேலரைப் பார்த்து கண்ண பகவான் கேட்ட கேள்வி உங்கள் மனைவி உங்கள் வரவறிந்து செலவிடுகின்றார்களா?” என்றுதான், நீங்கள் குசேலராகாமல் இருப்பதற்கும் வழி அதுதான். நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் செலவில் கட்டுப்பாட்டுடன்; இருங்கள். இதனை வள்ளுவர் பெருந்தகை வருமானம் அளவில் சிறியதாக இருந்தாலும் செலவு அதிகமாகாமல் இருந்தால் கெடுதல் இல்லை என்றார்.
ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை
போகுஆறு அகலாக் கடை
                            ஆனால் இப்போது மக்கள் எல்லோரும் தங்கள் நிதி நிலையை தாண்டி தங்கள் நிலையை மற்றவருக்கு காட்டத்தான் முனைகின்றனர். இதனை மருத்துவ செலவு, கல்யாண செலவு, கல்வி செலவு என எல்லாவற்றிலும் தங்கள் நிலைக்கு சற்று அதிகமாகவே செய்யவும் அல்லது போட்டிப்போடவும்தான் முனைப்பாக உள்ளனர்.  இது தவறு, மேலும் இது நம்மை பிரச்சனைகளுக்கே இட்டுச்செல்லும். வரவறிந்து செலவு செய்வதும், முதலீட்டை தொடர்வதும் தான் நல்லது.
                           
            நிதி சுதந்திரத்திற்கு என்று மட்டுமில்லாமல் பொதுவாகவே ஒரே ஒரு வேலையை மட்டும் சார்ந்து இருப்பது ஆபத்தானது நாம் சார்ந்து இருக்கும் வேலை ஒரு நாள் இல்லாமல் போவதற்கும் அல்லது நாம் செல்ல முடியாத நிலை ஏற்படுவதற்கும் இங்கு வாய்ப்பு அதிகம். பல சாம்ராஜ்யங்களே சாய்ந்த இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றே மாறாதது. எந்த ஒரு சூழ்நிலையும் இங்கு நிரத்தரம் இல்லை.  அதனால்தான் வாரன் பஃபெட் (Warren Buffett)  அவர்கள் ஒரு வருமானத்தை மட்டும் சார்ந்து இருக்க வேண்டாம் முதலீடு செய்து மற்றொரு வருமானத்தை எற்படுத்திக்கொள்என்றார்.
                           
         
             ஒரே ஒரு வேலையை சார்ந்து இருப்பது ஓர் முட்டாள்தனமான முடிவும்தான்உங்கள் உழைப்பு, அறிவு, திறமை, நேரம் மற்றும் ஆற்றல் என எல்லாவற்றையும் ஒரு வேலைக்கு செலவிட்டு அந்த வேலை தரும் பணத்தை மட்டுமே நம்பி வாழ வேண்டாம்.  இங்கு பலருக்கு தாங்கள் திறன் அல்லது ஆற்றலை பயன்படுத்தும் வாய்ப்பே அந்த வேலையில் கிடைப்பதில்லை. மேலும் பலர் தான் சார்ந்து இருக்கும் வேலைக்காக தங்கள் விலைமதிப்பற்ற சுதந்திரம், ஆரோக்கியத்தையும், உறவுகளையும் தியாகம் செய்கின்றனர். ஆகவே ஒரே ஒர் வருமானத்திற்கு உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் இழக்காமல் சம்பாதித்த பணத்தையோ அல்லது திறமையையோ அல்லது அறிவையோ முதலீடு செய்து மற்றுமொரு வருமானத்தை ஏற்படுத்துங்கள்.

                   வருமானம் அனைத்தும் செலவு செய்வதர்காக மட்டும் இல்லை. மாதம் பதிமூன்றாயிரம் சம்பாதிப்பவரும் வாழ்கின்றனர், மூன்று இலட்சம் சம்பாதிப்பவரும் வாழ்கின்றனர். உங்கள் மகிழ்ச்சியான மற்றும் சுதந்திரமான வாழ்க்கைக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதற்கு தக்கவாறு முதலீடு அல்லது செயலற்ற வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் திறமை இல்லாமல் இருக்கலாம், உங்கள் நேரத்தை முதலீடு செய்து திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறகு திறமையைக் கொண்டு வருமானத்தை பெருக்குங்கள். இதைதான் இளம்வயதில் சம்பாதிப்பதற்கு நேரம் செலவிடுவதைவிட கற்றுக்கொள்ள நேரத்தை செலவிடுங்கள்என்கின்றார் ராபர்ட் கியோசகி (Robert Kiyosaki). முதலில் உங்களிடம் பணம், இல்லாமல் இருக்கலாம் அதற்காக நீங்கள் வேலைக்கு செல்லலாம். அத்தோடு நிற்காமல் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்களுக்காக மிக கடினமாக உழைக்க வையுங்கள். அப்போதுதான் அதற்காக நீங்கள் உழைக்க வேண்டிய அவசியம் இருக்காதுஎன்கின்றார் நெப்போலியன் ஹில் (Napoleon Hill)… (தொடரும்).